நண்பர்கள் அணைவருக்கும் வணக்கம். பதிவு எழுதி பலமாதங்கள் ஆகிவிட்டது. இன்று மீண்டும் கொஞ்சம் அரிக்க ஆரம்பித்தது. எழுதிவிட்டேன்.
விஷயம் இதுதான் பல மாதங்களாகவே இங்கு அமீரகத்தில் [United Arab Emirates] அணைத்து பொருட்களும் சிறிது சிறிதாக விலை ஏற்றம் அடைந்து கொண்டிருப்பதை இந் நாட்டு அரசும் அதன் துறை சார்ந்த அமைச்சகங்களும் கவனித்துக்கொண்டிருந்ததை இன்று பத்திரிக்கைகளில் வந்த ஒரு செய்தி நிரூபணமாகிவிட்டது.
இந் நாட்டு அரசின் பொருளாதார துறையும் அதனுடன் சார்ந்த பிற துறைகளும் ஒரு [வியப்பான ] நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். பெப்சி மற்றும் கொக்க கோலா பானங்கள் நிறப்பி வரும் அலுமினிய கேன் தயாரிப்புகளை உடனடியாக விற்பனை கடைகளின் ஷெல்பில் இருந்து அகற்றும் நடவடிக்கைதான் அது. இந்த குளிர்பானங்கள் இங்கு மிக அதிகமாக அனைவராலும் நுகரப்படுவது மிக சாதாரணம்.
காரணம் இதுதான். இந்த இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும் அரசிடம் உத்தரவு பெறாமல். துறை சார்ந்த உத்தரவு பெறாமல் தங்களின் தயாரிப்புக்களின் விலைகளை உயர்த்திவிட்டன. மேலும் கேனின் கொள்ளளவுகளையும் முன்பை விட குறைத்துவிட்டன.
பெப்சியும், கொக்க கோலாவும் ஒரேநேரத்தில் தாங்கள் இது வரை வினியோகித்த கேனின் அளவான 355 ml அளவிலிருந்து 330 ml அளவிற்கு குறைத்தன. அதோடு இல்லாமல் கேன் ஒன்று 1 Dh. [1 Dirham ] என்ற விலையில் இருந்து 1.50 Dh [1.50 Dirham ] ஆக உயர்த்திவிட்டன. ஆனால் கேனின் மீது தங்களின் விலைகளை குறிப்பிடும் சட்ட விதிமுறைகளையும் அலட்சியப்படுத்தி விலைகள் குறிப்பிடாமல் விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன.
இது போன்ற நடைமுறைகள் இங்கு சட்ட மீறல்களாகும். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளில் இருந்தும், பொது மக்களிடமிருந்தும் சென்ற கண்டனங்களை கருத்தில் கொண்டு இந் நாட்டு அரசு எடுத்த முடிவாக வரும் நாட்களில் சிறிய கேனில் விற்கப்படும் பெப்சி மற்றும் கொக்க கோலா பானங்கள் அணைத்து விற்பனையிலிருந்து அகற்றப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும் நடந்து கொண்ட முறை வியப்பாக உள்ளதாக அரசு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெரும் தொகை லஞ்சமாக கொடுத்து நிறுவனங்கள் தங்களின் சுய நலத்துக்காக காரியங்கள் செய்வது இங்கு நடக்க இயலாது. இது அணைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் நம் நாட்டில் இது போல நடக்குமா என்று யோசித்தேன். நமது அரசாங்கமும், நம் அரசுக்கும், அதன் துறைகளுக்கும் அமைச்சகத்துக்கும் இப்படி ஒரு துணிவு வருமா? அப்படி வந்தாலும் பண மூட்டையால் இவர்களை மிக எளிதாக செயல் இழக்க வைக்க இந்தியாவில் இருக்கும் அணைத்து பன்னாட்டு, உள் நாட்டு நிறுவனங்களுக்கும் அது ஒன்றும் மிகப்பெரிய வேலையே அல்ல.
மக்களை பற்றி சிறிதும் எண்ணமே இல்லாமல் தங்களின் சுவிஸ் வங்கி கணக்கை போட்டி போட்டுக்கொண்டு உயர்திகொண்டு,. நாமும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் உளறி ஒப்பாரி வைத்துவிட்டு பின்னர் "ஜனநாயக " கடமையினை செய்துவிட்டதாக உதார்விட்டுகொண்டுதான் இருக்கிறோம். நடைமுறையில் இந்தியா ஒரு ஜன நாயக நாடு இல்லைதான்.